பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேய...