http://www.pustaka.co.in
பம்பாய்க்குப் பத்தாவது மைலில்...
Bombaykku Pathavathu Mileil…
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
முன்னுரை
எழுத்தாளர் ராஜேஷ்குமாரை எனக்குச் சில ஆண்டுகளாகத் தெரியும். அவர் எழுத்துலகில் காலடி எடுத்து வைக்குமுன், வியாபாரியாக இருந்து கொண்டே எழுத்தாளராகவும் வளர்ந்தார். வியாபார சம்பந்தமாக அடிக்கடி பம்பாய்க்கும் வடநாட்டுக்கும் போய் வரும்போது அவர் எண்ணமெல்லாம் எழுத்திலேயே இருந்தது. பார்த்தது, கேட்டது, அனுபவித்தது எல்லாம் அவர் எழுத்துக்கு பக்கபலமாயின.
நண்பர் ராஜேஷ்குமாருக்குக் கதை சொல்லுவதில் ஒரு தனித்திறமை உண்டு. சுவாரஸ்யமாகச் சொல்கிறார். சொந்த நடையில் சொல்கிறார். எளிய முறையில் வழக்குத் தமிழில் லேசான நகைச்சுவையோடு சொல்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக வளர்த்தல் இல்லாமல் சுருக்கமாகச் சொல்கிறார். விரல்விட்டு எண்ணி விடக் கூடிய புதுமைத் தமிழ் எழுத்தாளர்களில் ராஜேஷ் குமார் இப்போது முன்னணியில் நிற்கிறார். இவரைத் தூண்டி ஒளிவீசச் செய்த பெருமை எனக்கும் உண்டு என்பது இவர் அபிப்ராயம். இருக்கலாம். விளக்கில் எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல், நெருப்பு இல்லாமல் வெறும் வத்தியைத் தூண்டி விட முடியாதல்லவா? தூண்டினால் 'பளிச்' சென்று ஒளிவீசி எரிய வேண்டுமே! அந்த பலம் விளக்குக்கு வேண்டுமே!
இவருடைய சிறுகதைகளையும் பெருங்கதைகளையும் பல பத்திரிகைகளில் நான் படித்த பொழுது மேலும் மேலும் அவை என்னைப் படிக்கத் தூண்டின. அவர் எதைப்பற்றி எழுதினாலும் அதில் பம்பாய் நகரத்தின் வர்ணனைகள் இருக்கும். இப்போது வெளிவந்திருக்கும் ‘பம்பாய்க்குப் பத்தாவது மைலில்' என்ற நாவலில் பம்பாயைத் தவிர, புதுடெல்லியையும் நயமான நடையில் அழகாக வர்ணித்திருக்கிறார்.
அந்த வர்ணனைக்கு நடுவே ஒரு விமான விபத்தைப் பற்றிய விறுவிறுப்பான கதையை விமான வேகத்திலேயே கொண்டு போயிருக்கிறார்.
புதுடெல்லியை ராஜேஷ்குமார் நமக்கு அடையாளம் காட்டும்போது ஓரிடத்தில் சொல்வதைப் பாருங்கள்.
“மாருதி அவென்யூவின் இருபுறத்து நடைபாதைகளிலும் தொப்பைகளை ஒரு பிரச்னையாகக் கருதிய சர்தார்ஜிகள் வெள்ளை பனியன், வெள்ளை டிராயர், வெள்ளை கேன்வாசுகளில் வியர்வை மினுமினுக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்..."
இப்படி ஒரு சர்தார்ஜியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்போது 'அந்தத் தொப்பையைத் தூக்கிக் கொண்டு சர்தார்ஜியினால் எப்படி ஓட முடிகிறது?' என்ற எண்ணத்தையும் உண்டாக்கி விடுகிறார்!
பாரதத்தின் தலைநகரான புதுடெல்லியையும் தமது பேனாவினால் ஒரு குத்துக் குத்தியிருக்கிறார்.
“தான் ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகர் என்ற பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லாத டெல்லி சுறுசுறுப்போடு தன் இயக்கத்தை ஆரம்பிக்காமல் சோம்பேறித்தனமாகப் புரண்டு கொண்டிருந்தது.”
புதுடெல்லியை அதன் சோம்பேறித்தனத்தோடு அப்படியே விட்டு விட்டாலும் விமான நிலையத்தை வர்ணிக்கும்பொழுது பலவிதமான சுறுசுறுப்புகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
அவற்றைப் படிக்கும் பொழுது நம்மையும் புதுடெல்லி விமான நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறார். ஓடிக் கொண்டிருக்கும் விமானத்திற்குள் சதித் திட்டத்தோடு வைக்கப்பட்டிருக்கும் குண்டு வெடித்து எத்தனை பேர் கருகிப் போவார்கள் என்ற தாபத்திற்கு நடுவே நாம் தவிக்கிறோம். ஆனால் ராஜேஷ்குமாரின் கதைகளில் வரும் விவேக், கோகுல்நாத் என்ற இரண்டு சி.ஐ.டி. அதிகாரிகள் அஞ்சா நெஞ்சர்களாக விமானத்திற்குள் புகுந்து, தக்க தருணத்தில் வெடி விபத்தைத் தவிர்ப்பதோடு அந்தச் சதித் திட்டத்தை வகுத்த செக்யூரிட்டி ஆபீசர் தத்தாவையும் அமுக்குப் பிடிபோட்டு இழுத்து விடுகிறார்கள்.
இந்த பரபரப்பான 'பம்பாய்க்குப் பத்தாவது மைலில்' என்ற நாவலைப் பல பெருமூச்சுகளுக்கு இடையே நான் படித்து முடித்தேன்.
எழுத்தில் புதுமைத் துடிப்பு கொண்ட ராஜேஷ்குமார், கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். அவரிடமிருந்து மேலும் பல புதுமைக் கதைகளை வாங்கி வெளியிட்டு வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை உண்டாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
*****
என்னுரை
பம்பாய்க்குப் பத்தாவது மைலில்... என்கிற இந்த நாவல் தொடர்கதையாக கல்கண்டு வார இதழில் வெளி வந்தபோது நிறைய வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. 'ராஜேஷ்குமார் விமான நிலையத்தில் பணியாற்றுகிறாரா...?' என்பதே அது! ஏராளமான பேர் எனக்கு கடிதம் எழுதி கேட்டார்கள். நான் அவர்களுக்கெல்லாம் எழுதிய பதில் இதுதான் 'டியர் வாசகரே! நான் விமான நிலையத்தில் பணிபுரிபவன் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் நான் இன்னமும் ஒரு தடவைகூட விமானப் பயணம் செய்ததில்லை... விமானம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்துத்தான் இந்தத் தொடரை எழுதியுள்ளேன்' இப்படி நான் எழுதியதை வாசகர்களில் பல பேர் நம்பவில்லை.
இந்த மர்மத் தொடரை எழுதி முடிப்பதற்குள் மிகவும் திணறிவிட்டேன் காரணம். இது சாதாரண மர்மத் தொடர் அல்ல. விமான விபத்துகளோடு சம்பந்தப்பட்ட மர்மத் தொடர். என் இஷ்டத்திற்கு கதைக்க முடியாது. டெக்னிகல் எரர்ஸ் வந்தால் படித்த வாசகர்கள் புலி மாதிரி பாய்ந்து விடுவார்களே என்ற எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டே எழுதி முடித்தேன்.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய திரு. சாவி அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. லேனா தமிழ்வாணன் மனம்விட்டு பாராட்டிய நாவல்களில் இதுவும் ஒன்று.
புத்தகத்தைப் படித்து விட்டு - நீங்களும் பாராட்டத் தான் போகிறீர்கள்!
கழுத்தை சாய்க்கிறேன் பூமாலைகளுக்காக!
அன்புடன்
ராஜேஷ்குமார்
*****
1
டில்லியின் விடியற்காலை.
சாணக்யபுரியை ஒட்டி - மாருதி அவென்யூவின் ஏழாவது குறுக்குத் தெருவின் கடைசியில், திருவிழாவில் தவறிப் போன குழந்தை மாதிரி எதற்கும் ஒட்டாமல் நின்றிருந்த அந்த ரோஸ் வண்ண டிஸ்டெம்பர் பூசப்பட்ட பங்களாவின் உ...ள்...ளே வலதுபுற அறையின் மூலையிலிருந்து இந்தத் 'தொடர்கதை'யை ஆரம்பிக்கிறேன்.
அறையின் மூலையில் சின்னதாய் அழகாய் ஒரு டீபாய். அதன் மேல் ஒரு சக்கரவர்த்தியின் பெருமிதத்தோடு அமர்த்தலாய் உட்கார்ந்திருந்தது, மெலிதான பச்சை வண்ணப் பிரியதர்சினி டெலிபோன். அதற்குப் பக்கத்தில் டி.வி. கிருஷ் என்றது. அறையின் நடுவில் இரட்டைக் கட்டில், ஃபோம் மெத்தை, சுவரில்... அறையின் மற்ற சமாச்சாரங்களை வர்ணிப்பதற்குள் டெலிபோன் சீராய் அலற ஆரம்பித்தது.
குளியலறையிலிருந்து யார்ட்லி சோப்பின் நறுமணத்தோடு திரும்பிக் கொண்டிருந்த ஜெயதேவ், ஒரு வினாடி நின்று அந்த டெலிபோனை முறைத்தான். பச்சை வண்ணப் பிசாசே! இந்த அழகான காலை நேரத்தில் என்ன மாதிரியான நியூஸை எனக்குத் தரப் போகிறாய்?
அவனுடைய முறைப்பை லட்சியம் செய்யாமல் அது இன்னமும் ர்ர்ர்ரிங்கிக் கொண்டிருக்க, அவன் கோபமாய் ரிஸீவரின் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான்.
“ஹல்லோ!” என்றான்.
“காப்டன் ஜெயதேவ்!" என்று கேட்டது மறுமுனையில் ஒலித்த கரகரப்பான குரல்.
“எஸ்.”
“காப்டன் ஜெயதேவ்! நான் ஷர்மா பேசறேன் கண்ட்ரோல் டவரிலிருந்து.”
"குட் மார்னிங் ஷர்மா. என்ன விஷயம்?”
“ஒன்றுமில்லை, ஃபிளைட் நம்பர் 866-ஐ இன்றைக்கு நீங்கள் இயக்கப் போகிறீர்கள்.”
முகம் மாறினான் ஜெயதேவ். “ஏன்? காப்டன் விமல் நாத்துக்கு என்னவாயிற்று? அவர் போகவேண்டிய ஃபிளைட் தானே அது? வாட் ஈஸ் ராங் வித் ஹிம்?”
ஷர்மா கரகரத்தார். “காப்டன் விமல் நாத்துக்குப் பத்து நிமிஷத்துக்கு முன்புதான் ஊரிலிருந்து டெலிகிராம் வந்தது. மதர் ஸிரியசாம். உடனே உங்களை ‘அஸைன்' பண்ணிட்டு அவர் புறப்பட்டுப் போய்விட்டார். நீங்க வர்றீங்களா?”
ஜெயதேவ் யோசித்தான். மிஸஸ் மாத்யூ நேற்றைக்கு ராத்திரியே போன் பண்ணிச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “காப்டன், நாளைக்கு அவர் ஊரில் இருக்க மாட்டார். நீங்க எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வரலாம், நாளைக்குப் பூராவும் நான் உங்க பிராப்பர்டி. எப்படி வேணுமான்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்.” மிஸஸ் மாத்யூவின் செழிப்பான அந்த உடம்பு அவன் மனக் கண்ணில் சில விநாடிகள் நிழலாடியது.
“என்ன யோசிக்கிறீங்க காப்டன்.”
“நத்திங். வேற யாரையாவது அஸைன் பண்ணலாமே மிஸ்டர் ஷர்மா?"
“நோ. அந்த யானை 866-ஐக் கட்டி மேய்க்க உங்களால் தான் முடியும்.” ஷர்மாவின் சர்டிபிகேட் அவன் உடம்பில் விமானப் பெருமிதத்தை ஏற்படுத்த ஜெயதேவ் மிஸஸ் மாத்யூவை மறந்தான்.
“சரி. கம்பெனிக் காரை அனுப்புங்க. நான் ரெடியாயிடறேன்.”
ரிஸீவரை வைத்த கையோடு சுறுசுறுப்பானான் ஜெயதேவ்.
ஜெயதேவ் சொந்த ஊர் பெங்களூர் பக்கமாய் ஏதோ ஒரு 'ஹசகொலிகா.' பைலட்களுக்கே உரிய சவர முகம். தீட்சணமான கண்கள். இந்த முப்பத்தாறு வயதுக்குள் பைலட் ஆகி விட்டவன். பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலஹீனம். திருமணத்திற்கு இஷ்டப்படாதவன். அவசரப் படாதவன். பூமியில் இருந்த நேரங்களைக் காட்டிலும், வானத்தில் பறந்த நேரங்கள் அதிகம். இவனுடைய ஹாபி கையாலாகாத பணக்காரக் கணவன்மார்களின் மனைவிமார்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. சமீபத்தியக் கண்டுபிடிப்பு மிஸஸ் மாத்யூ.
முப்பது நிமிடத்தில் தயாராகிப் பங்களா வாசலுக்கு வந்தான் ஜெயதேவ்.
மெலிதான ஆரஞ்சு வர்ணமும், லேசான மஞ்சள் நிறமும் கிழக்குத் திசையில் நிரம்பிக் கொண்டிருக்க, சூரியன் டில்லியைக் கழுவ ஆரம்பித்திருந்தான். மாருதி அவென்யூவின் இருபுறத்து நடைபாதைகளிலும் தொப்பைகளை ஒரு பிரச்னையாகக் கருதிய சர்தார்ஜிகள், வெள்ளை பனியன், வெள்ளை டிராயர், வெள்ளை கான்வாஸ்களில் வியர்வை மினுமினுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சல்வார் கம்மீஸ் அணிந்த டீன்ஏஜ் பெண்கள் 'எல்' போர்டுகள் ஊசலாடும் கார்களோடும் சிரிப்போடும் காலி மைதானங்களை நோக்கிப் போக- எதிர்ப்புறமாய் சைக்கிள்களை மிதித்துக் கொண்டு கைகளில் ஹாக்கி மட்டைகளை சுழற்றியபடி மீசை அரும்பிய ப்ளஸ் டூ மாணவர்கள் விசிலடித்துக் கொண்டே போனார்கள். மற்றபடி
தான் ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் தலை நகர் என்கிற பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லாத அந்த டில்லி, சுறு சுறுப்போடு தன் இயக்கத்தை ஆரம்பிக்காமல் சோம்பேறித்தனமாய்ப் புரண்டு கொண்டிருந்தது.
“ஙி... ஙி... ஙி...”
வாசலில் கார் சிணுங்கியது.
டிரைவர் சீட்டினின்றும் கீழே அரக்கப் பறக்க இறங்கிய டிரைவர், “குட் மார்னிங் காப்டன்” என்றான். ஜெயதேவ் தன் இடது கையின் லேசான அசைப்பின் மூலம் அவனுடைய குட் மார்னிங்கை ஏற்றுக்கொண்டு காரில் ஏறினான். வாசல் அருகே வந்து நின்ற தோட்டக்காரனிடமும் சமையற்காரனிடமும் சொன்னான்:
“வீட்டைப் பத்திரமா பாத்துக்குங்க. நான் நாளைக்குக் காத்தாலே திரும்பிடுவேன்.”
-- இனிமேல் அவன் உயிரோடு திரும்பப் போவதில்லை என்கின்ற உண்மை அப்போது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லாததால்...
அவர்கள் தலைகளை அசைத்தார்கள் - வெறுமனே.
டில்லி- பாலம் விமான நிலையம்.
உள்ளூர் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் ஏகப்பட்ட பஸ்களைப் போல் - ஏகப்பட்ட விமானங்கள் திசைக்கொன்றாய் வாலையும், மூக்கையும் நீட்டிக்கொண்டு சாதுவாய் நின்றிருந்த அந்த உலோகப் பறவைகளில் எத்தனை ரகம்? பிரான்ஸில் ஸிட் ஏவியேஷன் தொழிற்சாலையில் ஏவான் மார்க் 417 ரகத்தைச் சேர்ந்த டபுள் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட காரவெல் விமானம் ராட்சத்தனமாய் நின்றிருக்க, அதற்குப் பக்கத்தில் டக்கோட்டா விமானம் அற்பத்தனமாய்த் தெரிந்தது. ரன்வே கிடைக்காமல் - அதன் க்ளீயரென்ஸை எதிர்பார்த்து ஓர் அரபு விமானம் விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
விமான நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நின்றிருக்க அந்த அணிவகுப்பில் பிளவுபட்ட ஓர் இடத்தில் கம்பெனிக் கார் சொருகி நின்றது.
ஜெயதேவ் இறங்கினான்.
டில்லி கொஞ்சம் அதிகமாய் வெளுத்திருந்தது.
ஜெயதேவின் நுரையீரல்கள் கொஞ்சம் புகை வேண்டும் என்று கேட்க... அதற்குச் செவி சாய்த்தவன் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து 555 ஒன்றை உருவி உதட்டுக்குத் தாரை வார்த்தான். தீக்குச்சி நெருப்பில் குளித்துச் சிகரெட்டைத் தீ மூட்ட அது அடர்த்தியாய்ப் புகைந்தது.
கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தான் ஜெயதேவ். வெள்ளை உடைகளில் விமான நிலையச் சிப்பந்திகள் அங்கொருவரும், இங்கொருவருமாய்த் தெரிய, விமான லாஞ்ச் முழுவதும் விதவிதமான கூட்டம் பரவியிருந்தது. “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கத்தைச் சார்ந்த மொட்டையடிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர்கள் சப்ளாக் கட்டைகளை வைத்துக்கொண்டு பிறருக்குத் தொந்தரவு தராத வகையில் மெல்லிய கோரஸில் பாடிக்கொண்டிருந்தார்கள். உள்ளூர்ப் பிரமுகர் ஒருவருக்கு ரோஜா மாலைகளை அணிவித்து நாசூக்காக கைகளைத் தட்டிப் பாராட்டிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். முயல் கண்களின் பளபளப்போடு வெள்ளைக்காரக் குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தன.
“குட்மார்னிங் காப்டன்...”
குரல் கேட்டு ஜெயதேவ் நின்றான். ஏறிட்டான்.
பிரதீப் நின்றிருந்தான்.
பிரதீப் உதவி பைலட். சொந்த ஊர் பம்பாய். வருகிற மாதம் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டப் போகிறவன். இருபத்தெட்டு வயதான அந்த இளைஞனுக்கு நிறையப் பிரமோஷன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏர் இந்தியா பூராவும் பரவியிருந்தது.
“குட் மார்னிங் பிரதீப். ஹெள ஆர் யூ?”
“ஃபைன்! இன்றைக்கு உங்களோடுதான் பறக்கப் போகிறேன்.”
“ஓ, கிளாட் டு ஹியர் இட், பாஸஞ்சர்ஸ் எவ்வளவு பேர்?”
“ஐம்பத்திரண்டு பேர்.”
“மினிஸ்டர்ஸ் யாராவது?”
“யாருமில்லை!”
“சினி ஆக்டர்ஸ்?”
“ஊஹும்.”
"இன்றைக்கு ஃபிளைட் டல்லடிக்கப் போகிறது." ஜெயதேவ் சிரித்தான்.
“ட்ரிப் ஷீட் ப்ரிப்பேர் பண்ணிடீங்களா?”
“அப்பவே...”
ஜெயதேவ் பிரமிப்போடு இணைந்து நடந்தான். 'டார் மாக்' வந்ததும் பிரதீப் பிரிந்தான். அவன் பிரியப் பிரிய ஜெயதேவ் கேட்டான். “நம்ம ஃபிளைட்டுக்கு யார் இன்ஜினியர்?”
"நாயக்!” என்றான் பிரதீப்.
"மைகுட்னஸ்! அவனா? குடிக்கவும் அரட்டையடிக்கவும் தான் அவன் லாயக்கு. பட்டறையில் உட்கார வைக்க வேண்டியவர்களையெல்லாம் இந்த ஏர் இந்தியா எப்படித்தான் இன்சினீயர்களாய் அமர்த்துகிறதோ?” வாய் விட்டுத் திட்டினான் ஜெயதேவ்.
"நாயக், இப்ப மாறிட்டார். அவருடைய மனைவி இறந்த பிறகு அந்தக் குடிப் பழக்கத்தையே அவர் விட்டுட்டார். நவ் ஹி ஈஸ் எ வெரி எஃபிஷியன்ட் ஹேண்ட் யூ நோ.” சிரித்தான் பிரதீப்.
ஜெயதேவ் பட்டென்று பேச்சை மாற்றினான்.
“நம்ம ஃபிளைட்டுக்கு யார் ஹோஸ்டஸ்?”
“ரஞ்சனா!"
"குட், இன்னொருத்தி?”
“வைசாலி.”
“சே!” என்றான் ஜெயதேவ்.
லாஞ்சின் ஒரு கூரையில் இருந்த ஸ்பீக்கரில் ஒரு பெண்ணின் சாக்லேட் குரல் வழிந்தது. “டில்லியிலிருந்து பம்பாய் செல்லும் பிரயாணிகள் ஃபிளைட் நம்பர் 866-க்குச் சென்று அமர வேண்டுகிறோம்.” ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி அறிவிப்பு எழ- லாஞ்சில்-லெளஞ்சில் இருந்தவர்களுள் சில பேர் எழுந்தார்கள். தத்தம் லக்கேஜ்களைச் சுமந்து கொண்டு ஃபிளைட் 866-ஐப் பார்த்தபடி நடந்தார்கள்.
காரவெல்லின் வயிற்றுப் பகுதியில் ஏணிப் படிகள் அப்பிக் கொள்ள, அதில் ஏறி உள்ளே நுழைந்த பிரயாணிகளை ரஞ்சனா தன் ரெடிமேட் சிரிப்பின் மூலம் வரவேற்றாள். நமஸ்தே சொன்னாள். உட்கார வேண்டிய சீட் எண்களைச் சுட்டிக் காட்டினாள்.
எல்லோரும் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் தரையில் நின்றிருந்த டிராபிக் அஸிஸ்டெண்ட் மேலே ஏறி வந்தான். பிரயாணிகளின் பெயர்ப் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு சரி பார்த்தான்
விமானத்தின் உள்ளே சிவப்பு விளக்கு ரத்தமாய்ப் பிரகாசிக்க-அதன் கீழே - எழுத்துக்கள் மரியாதை உணர்வோடு எச்சரித்தன.
“புகை பிடிக்கக் கூடாது. தயவு செய்து பெல்ட் அணியுங்கள்.”
டிராபிக் அஸிஸ்டண்ட் கீழே இறங்கிக் கொள்ள விமானத்தின் இடுப்புப் பகுதியில் உறவு கொண்டிருந்த ஏணிப்படி நளினமாய் நகர்ந்து கொண்டது.
ஜெயதேவ் அமர்ந்தான். அவனுக்குப் பக்கத்துச் சீட்டில் பிரதீப்.
ஃபிளைட் 866-ன் ராட்சத உடம்பில் தான் எத்தனை உறுப்புக்கள்? இந்த உலோக உடம்பை இயக்க, கிளப்ப, பறக்க வைக்க இயக்க எத்தனை கருவிகள், ஸ்விட்ச் போர்டுகள்? சிக்கலான ஒயர்கள்? ஒவ்வொன்றிலும் ஒருவித இன்றியமையாத்தனம் புதைந்து கிடந்தது. எதிரே தெரிந்த நூற்றுக்காணக்கான சிக்கனல் விளக்குகள் உலகத்தில் இருக்கும் எல்லா நிறங்களையும் பிரகாசித்துக் காட்டியது.
பிரதீப் கண்ட்ரோலைச் சரி பார்த்தான். கைரோ கம்பாஸைத் தட்டி அதற்கு உயிர் கொடுத்தான். ஜெயதேவ் ஹெட்போனைத் தலையில் மாட்டியபடி - அதில் ஊசலாடிய மைக்ரோஃபோனில் பேச ஆரம்பித்தான்.
“டில்லி கண்ட்ரோல் டவர்? திஸ் ஈஸ் எய்ட் சிக்ஸ் சிக்ஸ் ரிக்வெஸ்ட் ஸ்டார்ட் ஆஃப். கிவ் க்ளியரன்ஸ்..."
விமானத்தைக் கிளப்புவதற்காகக் காத்திருந்தான்.
அதே நேரம்...
கண்ட்ரோல் டவரில்...
எய்ட் சிக்ஸ் சிக்ஸ், திஸ் ஈஸ் டில்லி கண்ட்ரோல் டவர். வானம் சுத்தமாய் இருக்கிறது. நோ க்ளவிட்ஸ். வெதர் இஸ் ஃபைன்-பிக்கப் த ரன்வே நம்பர் ஃபைவ். க்ளையர் கோ அஹெட்...” பேசிக் கொண்டிருந்த ஷர்மா தன்னை யாரோ பின் பக்கமாகத் தொடுவதை உணர்ந்து திரும்பினார். சப்ஆபீசர் ரகோத்தம் நின்றிருந்தார். சொன்னார்:
"உங்களுக்கு ஓர் அவசர ஃபோன்.”
எழுந்தார் ஷர்மா. கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து மேஜையின் மேல் கரப்பான் பூச்சியைப்போல் கவிழ்ந்து கிடந்த ரிஸீவரை எடுத்தார்.
“ஹலோ, ஷர்மா ஹியர்!”
மறு முனையில் ஓர் ஆண் குரல் கேட்டது. "கண்ட்ரோல் டவர் சீஃப் ஆபீஸர் ஷர்மாவா?”
“எஸ்.”
“ஃபிளைட் நம்பர் எய்ட் சிக்ஸ் சிக்ஸ் புறப்பட அனுமதி கொடுத்து விட்டீர்களா?”
“ஏன்?”
"அனுமதி கொடுக்காதீர்கள். அந்த ஃபிளைட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கிறது!”
*****
2
உடம்பெல்லாம் பரபரப்பானார் ஷர்மா...
“ஏய்...ஏய்...யார்...நீ” என்று உறுமினார்.
"இப்ப நான் யார்ங்கிறது தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க...? உங்க பெண் ஷீலாவைக் கட்டிக் கொடுக்கப் போறீங்களா?”
“ஏய்... நீ...?”
“உஷ்!" அதட்டினான் அவன். “மிஸ்டர் ஷர்மா, முதல்ல ஃபிளைட்டை நிறுத்துங்க... ரொம்பவும் சீரியஸ். ஃபிளைட்டோட உடம்புல எங்கேயோ வெடிகுண்டு இருக்கு... செக் இட் பர்ஸ்ட்... அப்புறம் சாவகாசமாய்ப் பேசலாம்...”
எதிர்முனையில் பேசினவன் பட்டென்று ரீஸீவரை வைத்தான்.
முகம் பூராவும் வியர்வையில் நீச்சலடிக்க ஷர்மாவும் ரிஸீவரை வைத்துவிட்டுக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு டவருக்குள் பாய்ந்தார். அங்கிருந்தே தெரிந்த ரன்வேயில், ஃபிளைட் 866 நின்றிருந்தது. விமானத்தின் இறக்கைகளுக்குக் கீழே கட்டை விரலைக் கீழ்நோக்கித் தாழ்த்திக் கொண்டு இன்ஜீனியர் நின்றிருக்க ஃபிளைட் கிளியரன்ஸுக்காகக் காத்திருந்தது.
“மை குட்னஸ்...” என்று வாய்விட்டு முனகிக்கொண்டே மைக்ரோ போனில் காப்டன் ஜெயதேவை அவசரக் குரலில் அழைத்தார் ஷர்மா.
"காப்டன்...! நோ கிளியரன்ஸ் டு ஃபிளைட் சிக்ஸ் சிக்ஸ். ஓர் அவசரமான செய்தி! ஃபிளைட்டில் வெடிகுண்டு இருப்பதாக யூனேனிமஸ் போன் கால் வந்தது. அதை நாம் இக்னோர் பண்ணுவதற்கில்லை. பாஸஞ்சர்ஸுக்கு இன்பார்ம் செய்து லாஞ்சுக்குப் போகச் சொல்லுங்கள்...”
ஜெயதேவின் டெலிபோனில் ஷர்மாவின் வார்த்தைகள் துல்லியமாய் விழ, அதிர்ந்தான் அவன். பிரதீப்பைப் பார்த்தான். ஃப்ளாப், கண்ட்ரோலில் ஈடுபட்டிருந்த பிரதீப் அவனைப் புரியாமல் பார்க்க, “டைனமெட்” என்றான்.
பிரயாணிகளுக்குத் தகவல் அனுப்பினான்.
“பயணத்தைத் துவங்கயிருக்கிற இந்த நேரத்தில், ஒரு சின்ன இடையூறு. விமானத்தில் டைனமெட் இருப்பதாக ஒரு தகவல். பிரயாணிகள் பதட்டப்படாமல் அவசரப்படாமல் இறங்கி லாஞ்சுக்குச் சென்று காத்திருக்க வேண்டுகிறேன். இரண்டு மணி நேர செக் அப்பிற்குப் பிறகு ஃபிளைட் புறப்படும். நேர்ந்த அசௌகரியத்திற்காக வருந்துகிறேன்.”
இடுப்புக்குப் பெல்ட்டை அணிந்தவர்கள் சட்டென்று அதைப் பிரித்துக்கொண்டு எழுந்தனர். மெல்லிய பதற்றமும், நியாயமான அவசரமும் விமானத்தில் நிரம்பின. ஏணிப்படிகள் மீண்டும் ஓடிவந்து விமானத்தின் இடுப்பை அணைத்துக் கொள்ள, பிரயாணிகள் கீழே உதிர்ந்து லாஞ்சை நோக்கி நகர்ந்தார்கள். தீயணைப்பு வண்டிகள் கணகணத்தபடி ஃபிளைட்டைச் சுற்றி அரைவட்டம் போட்டுக்கொண்டு நிற்க ஆரம்பித்தன.
செக்யூரிட்டி ஆபீஸர்கள் ஒரு கும்பலாய் விமானத்தை நோக்கி விரைய, ஜெயதேவ் இறங்கி டவரை நோக்கிப் போனான்.
ஷர்மா இன்னமும் வியர்வையில் இருந்தார். அவருடைய தக்காளி நிறமுகம் கன்றியிருந்தது. ஜெயதேவைப் பார்த்ததும், “அந்த டைனமெட் விவகாரம் வெறும் ரூமர் தான்!” என்றார்.
"போனில் பேசியது யார்?” ஜெயதேவ் கேட்டான்.
“அவன் சொல்லவில்லை.”
“எவனோ விளையாடறான்.”
“எனக்கும் அப்படித்தான் தெரியுது.”
“ஃபிளைட்டில் யாராவது வி.ஐ.பி. இருக்காங்களா காப்டன்?”
“வி. ஐ. பி. யாருமில்லை. வேணுமானா ஐ. பி. கொடுத்தவங்க இருப்பாங்க...”
“ஜோக்கடித்தான் ஜெயதேவ். ஷர்மா சிரிக்கவில்லை. அவர் வெடிகுண்டு அவஸ்தையில் இருந்தார். வெடிகுண்டு இருந்தா நிச்சயமாய்க் கிடைச்சுடும். செக்யூரிட்டி ஆபீஸர் குப்தா சாமான்யப்பட்டவரில்லை. கில்லாடி, கல்கத்தாவிலே அவர் இருந்தப்ப நிறையத் தடவை டைனமைட்ஸை ட்ரேஸ் அவுட் பண்ணி வெளியே கொண்டு வந்திருக்கிறார்.” ஷர்மா சொல்லச் சொல்ல ஜெயதேவ் வெளியே வந்தான். விமான நிலையத்தின் பரந்தவெளிக் காற்று ஜில்லென்று முகத்தில் அடிக்க சிகரெட் ஒன்றை உருவிக்கொண்டான். அனல் புள்ளிகளில் சில புள்ளிகளை உராய்ந்து ஒரு சின்ன நெருப்பை உண்டாக்கி அதில் சிகரெட்டின் தலையைக் குளிப்பாட்டினான். அது, புகையைக் கண்ணீராய்ச் சிந்தியது.
தூரத்தே அவனுடைய ஃபிளைட் 886 செக்யூரிட்டிக் கும்பலால் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. தீயணைப்பு வண்டிகள் உன்னிப்பாய்ப் பார்த்தபடி நின்றிருந்தன.
‘இந்த வெடிகுண்டுப் புரளியை கிளப்பியவனே - நீ யார்? இந்தப் பரந்த டில்லியில் எந்த டெலிபோன் பூத்திலிருந்து இந்தப் பிரச்னையைக் கிளப்பிவிட்டாய்? நீ செய்தது. வேடிக்கைக்காகவா, இல்லை நிஜமாகவா?'
பிரதீப் அவனை நோக்கி வந்தான்.
ஜெயதேவ் கேட்டான். “இன்னும் எத்தனை நேரம் ஆகுமாம்?”
"மோர் தென் டூ அவர்ஸ், பாசஞ்சர்ஸை மறுபடியும் செக் பண்ணப் போறாங்களாம்.”
“போச்சுடா!”
தலையில் கை வைத்துக்கொண்டு போலியாய்க் கவலைப்பட்டான் ஜெயதேவ்.
அப்பட்டமான புரளி! ஷர்மா சிரித்தார்.
ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஃபிளைட் 866 கடுமையாய் அலசப்பட்டு வெடிகுண்டு இல்லையென்று ஊர்ஜிதம் ஆனதும் ஷர்மாவின் வியர்வை நின்றது.
பிரயாணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்காக நாசூக்காக வருந்திய விமான நிர்வாகம், அவர்களை மறுபடியும் ஃபிளைட்டில் அமரும்படி கேட்டுக்கொண்டது.